×

கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு: பாஜ ரத யாத்திரைக்கு வழங்கிய அனுமதி ரத்து

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ.வின் ரத யாத்திரைக்கு தனி நீதிபதி அளித்த அனுமதியை, கொல்கத்தா உயர் நீதிம்னறம் ரத்து செய்தது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் பாஜ சார்பில் ரத யாத்திரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 34 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும் இந்த ரத யாத்திரையை  கடந்த 7ம் தேதி குச்பிகார் மாவட்டத்தில் பாஜ தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், இந்த யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜ வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தனி நீதிபதி, பாஜ.வின் யாத்திரைக்கு அனுமதி வழங்கியதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கும் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேற்கு வங்க அரசு நேற்று மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி தேபேசிஸ்கர் குப்தா மற்றும் நீதிபதி சம்பா சர்கார் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதை அவசர மனுவாக விசாரிக்கும்படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ‘ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே, ரத யாத்திரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்று மேற்கு வங்க அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யாத்திரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை அதிரடியாக ரத்து செய்தனர். மேலும், இந்த மனுவை தனி நீதிபதிக்கு மீண்டும் அனுப்பி, மாநில உளவுத்துறை வழங்கிய அறிக்கையை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்படி உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Calcutta High Court ,Bhata Rata Yatra , Calcutta ,High Court , Bhata Rata Yatra
× RELATED மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை...